ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தர்,மாவை.சேனாதிராசா ஆகியோரின் உரைகளிலும் நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரிவதைக் காணமுடிகிறது.
புங்குடுதீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மாவை.சேனாதிராசா அவர்கள் அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.
அட! இது நல்ல கதையாக இருக்கிறதே! அந்தத் தீர்மானம் என்னவாகவிருக்கும் என்று அறிய மனம் அவாப்பட்ட போது,அந்தத் தீர்மானம் என்ன என்பது எங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்தான் தெரியும் என்றும் மாவை.சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.
குறித்த தீர்மானம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தால் அது தீர்மானத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவர் தீர்மானம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
எதுவாயினும் இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் ஒரு வலுவான தீர்மானத்தை வைத்துள்ளன என்பது நம்பிக்கை தருகிறது.
இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்ற நினைத்தால், ஐயா! நீங்கள் கூறிய அந்தத் தீர்மானத்தை செய்யுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவை தமிழ் மக்கள் கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆனால் அந்தத் தீர்மானம் என்ன என்பது குறித்து நாம் ஆராயாமல் விட்டாலும் அப்படியொரு தீர்மானத்துடன் இருக்கக்கூடிய நம்பிக்கையைத் தந்த மாவை.சேனாதிராசாவுக்கு நாம் நன்றி கூறிக்கொள்ள வேண்டும்.
இதேபோன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிக்கும் படி படைத்தரப்பை சந்தித்துள்ளார்.
அச்சந்திப்பில் ஜனாதிபதி உத்தரவிட்டால் தமிழ் மக்களின் நிலத்தை விடுவிப்பதில் படையினருக்கு எந்த இடைஞ்சலும் இல்லை என்று கூறியுள்ளனராம்.
அப்படியானால் தமிழ் மக்களின் நிலத்தை படையினர் விடுவிக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி தான் காரணம் என்பது போல விடயம் அமைகிறது.
ஆக, படையினர் கூறியதை சம்பந்தர் ஐயா, முற்றுமுழுதாக நம்பியுள்ளார் என்றே கருத வேண்டும்.
மக்களின் நிலங்களை விடுவிக்க முடியாது என்று படை அதிகாரிகள் கூறிய செய்திகள் ஊடகங்களில் ஏற்கெனவே வெளிவந்துள்ள போதிலும் இது தொடர்பான தகவல்கள், தரவுகள் எதுவுமின்றி படையினரைச் சந்தித்தால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை எனலாம்.
எதுவாயினும் படையினரைச் சந்தித்த சம்பந்தர் ஐயா, அடுத்து அவசர அவசரமாக ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும்.
அவரைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க படையினர் தயார், நீங்கள் தான் உத்தர விடவில்லையாம் என்று கூற வேண்டும்.
அப்போது தான் ஜனாதிபதியும் படைத்தரப்பும் முறுகிக் கொள்ளும் நிலைமை வரும். இதை சம்பந்தர் ஐயா உடனடியாகச் செய்வார் என நம்பலாம்.