இறுதி யுத்த சாட்சியமாகவும் இலங்கை கடற்படையின் கோத்தாபடைத்தளம் அமைந்துள்ளதுமான வட்டுவாகல்பகுதியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டகளமிறங்க தயாராகிவருகின்றனர்.
அவர்களை வட்டுவாகலில் கடற்படையினர் வீடியோ எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன…
ஏற்கனவே கேப்பாபுலவு மக்களது போராட்டம் நிலவிடுவிப்பிற்காக தொடர்கின்ற நிலையினில் கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நாளை மறுதினம் 19ம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக இடம்பெயர்ந்துள்ள அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர் காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.இக்காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவீகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் மக்களது போராட்டத்தால் அது தடைப்பட்டிருந்தது.
தமது காணிகளை விடுவித்து தந்துதவுமாறு மக்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு உரியதரப்புக்கள் செவிசாய்க்காத நிலையில், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ள கடற்படைமுகாம் முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தற்போது முடிவு செய்துள்ளனர்.
கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளும் இறுதியுத்தம் இடம்பெற்ற பகுதியாகக் காணப்படுவதுடன் இப்பகுதிக்குள் பொதுமக்களின் பெருமளவான சொத்துக்களும்; கைவிடப்பட்டுள்ளன. அத்துடன் இறுதி யுத்த சாட்சியமாகவும் அப்பகுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.