இரட்டை இலை சின்னத்திற்காக பண விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ள பொலிஸார் குறித்த அறிவிப்பை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தினகரன் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விசாரணைக்காக டெல்லி பொலிஸார் சென்னைக்கு விஜயம் செய்யும்போது தினகரன் கைதுசெய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.