‘நல்லிணக்க அரசு என்று போலித்தனமாக தமிழ் மக்களை ஏமாற்றாதே’ என கோஷம் எழுப்பியவாறு, மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரியும், படையினரை வெளியேற்ற வலியுறுத்தியும் மன்னாரில் பாரிய கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து பின்னர் மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலை சென்றடைந்தது.
இதன்போது, ‘சொந்த மண் எமக்கு வேண்டும்’, ‘நல்லிணக்க அரசு என்று போலித்தனமாக தமிழ் மக்களை ஏமாற்றாதே’, ‘அரசே தமிழர் தயாகப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றாதே’, ‘எமது மண்ணில் வாழ எமக்கு உரிமை இல்லையா?’, ‘முள்ளிக்குளம் எங்களின் சொந்த மண் – அது எமக்கு மீண்டும் வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணி, மாவட்டச் செயலக நுழைவாயிலை சென்றடைந்தவுடன் அங்கு, முள்ளிக்குளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதமொன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் ஆரம்பமான இப் பேரணியில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளையும் சேர்ந்த மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.