மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும். எனவே குறித்த பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றாமல் அவ்விடத்தில் வைத்தே உக்கலடையச் செய்ய வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒரு விஞ்ஞானியாவேன் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளேன். எதிர்பாராத விதாமாக தற்போதைய அரசாங்கமும் கூட எனக்கு வித்யா ஜோதி விருது வழங்கியது.
அதனால் மீதொடமுல்லை குப்பை மேடு விவகாரம் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞான முறையில் எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என்பதை சகலரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தற்போது மீதொடுமுல்லை குப்பை மலையை அகற்றுவது சரியான முடிவல்ல என விஞ்ஞான துறைசார்ந்த சகலரும் கூறுகின்றார்கள். அது அவ்வாறே இருக்க இடமளிக்க வேண்டும் பின்னர் அதனைச் சூழ கனமான பிலாஸ்டிக் வகையிலான பாதுகாப்பு வேலிகளை இடவேண்டும். அவ்வாறு செய்தால் குப்பை மேடு இயற்கை பசளையாக மாறிவிடும்.