காணிப்பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதில்லையென உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும் அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில், அரசாங்க அதிகாரிகள் தமது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லையென உறவுகளை தொலைத்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 60ஆவது நாளாகவும், வவுனியாவில் 56ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 42ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 37ஆவது நாளாகவும், திருகோணமலையில் 47ஆவது நாளாகவும் இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.