ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியை கன்னத்தில் அறைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பள்ளி மாணவி
திண்டுககல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 15–வது வார்டு தும்பிச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் காளீஸ்வரி (வயது 9). இவள், அங்குள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தாள். அந்த பள்ளியில் அம்மு என்ற ஹேமாமாலினி (40) தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஹேமாமாலினி, வேறு பள்ளியில் படிக்கும் தனது மகனை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர் சிறிது நேரம் வகுப்பறையை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்தவேளையில் வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போடாமல் பார்த்து கொள்ளும்படி காளீஸ்வரியிடம் கூறியுள்ளார்.
கன்னத்தில் அறைந்தார்
மேலும் யாராவது பேசினால் தலையில் கொட்டும் படி கூறியுள்ளார். அப்போது ஆசிரியையின் மகன் சத்தம் போட்டதாக தெரிகிறது. உடனே காளீஸ்வரி, அவனை தலையில் கொட்டியதாக தெரிகிறது. இதனால் அவன் அழுது கொண்டே இருந்துள்ளான். சிறிது நேரத்தில் வகுப்பறைக்கு வந்த ஹேமாமாலினி தனது மகன் அழுது கொண்டிருப்பதை பார்த்து விசாரித்துள்ளார்.
அப்போது சக மாணவர்கள் காளீஸ்வரி கொட்டியதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமாமாலினி, காளீஸ்வரியின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தையில் மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காளீஸ்வரி மனமுடைந்து காணப்பட்டாள்.
தூக்குப்போட்டு தற்கொலை
பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி சோகமாகவே இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர், காளீஸ்வரியிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவள் பதில் எதுவும் கூறாமல் இருந்துள்ளாள். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காளீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மர்மச்சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இதற்கிடையில் பள்ளியில் நடந்த விவரத்தை காளீஸ்வரியின் தோழிகள், அவருடைய பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியை அடித்த ஆசிரியை மீது கொலை வழககுப்பதிவு செய்யக்கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியை மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.