Loading...
மகாபாரதம் கதை ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
சரித்திர கதைகள்
சரித்திர, புராண கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வரலாற்று பின்னணியில் தயாரான பாகுபலி வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படமும் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளது.
தற்போது மக்களின் வாழ்வியல் தத்துவமாக கருதப்படும் இந்தியாவின் உயரிய இதிகாசமான மகாபாரதமும் சினிமா படமாக தயாராகிறது. ஏற்கனவே மகாபாரத கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தியாவின் பல மொழிகளில் படங்கள் வெளிவந்துள்ளன. கர்ணன் பெயரில் சிவாஜிகணேசன் நடித்த படமும் வெளிவந்து இருக்கிறது. டெலிவிஷன்களிலும் மகாபாரதம் கதை தொடர்களாக வந்து மக்களை கவர்ந்தது.
படமாகும் மகாபாரதம்
தற்போது மகாபாரதத்தின் முழு கதையும் முதல் தடவையாக ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்தியாவின் மற்ற மொழிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 100 மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட உள்ளது. பிரபல மலையாள இயக்குனரான வி.ஏ.குமார் மேனன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். பத்ம பூஷண் விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதுகிறார்.
அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. முதல் பாகம் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் திரைக்கு வரும். வெளிநாட்டு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கண்ணன், அர்ஜுனன், திரவுபதி, கர்ணன், துரியோதனன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம் இந்தி, தெலுங்கு பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்–நடிகைகள் நடிக்க உள்ளனர்.
பீமனாக மோகன்லால்
பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் தேர்வாகி உள்ளார். டைரக்டர் வி.ஏ.குமார் கூறும்போது, ‘‘மகாபாரதம் கதையை படமாக்குவது குறித்து பல வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம். இந்த படத்தில் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். நவீன தொழில் நுட்பத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் அடுத்த தலைமுறைக்கு பிடித்த படமாக இது உருவாகிறது’’ என்றார்.
மோகன்லால் கூறும்போது, ‘‘மகாபாரதம் படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
Loading...