தமிழர்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் எவ்வளவு அலட்சியமான எண்ணப்போக்கில் இருக்கின்றது என்பதற்கு கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் சிறந்த உதாரணமாக இருக்கின்றது.
யுத்த காலத்தில் படையினர் அபகரித்த தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களை மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைப்பது தொடர்பாகவும், சிறைகளில் பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்களாம்.
அந்தக் கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மைத்திரிபால கூறும்போது,படையினர் வசமிருக்கும் தமிழ்மக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை எடுத்து அது தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறும், தமிழ் அரசியல் கைதிகளில் எத்தனை பேரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யக்கூடிய ஏது நிலை இருக்கின்றது என்பதை ஆராய்ந்து தனக்கு அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருந்தாராம்.
இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டனவாம். தனது அறிவுறுத்தலுக்கு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம், அது தொடர்பான அறிக்கையும் தனக்கு இதுவரை வழங்கப்படவில்லையாம். என்று கூறி தனது தவறை ஒப்புக் கொண்டாராம்.
ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு நடத்துவதற்குக் காரணம் ஜனாதிபதியே முப்படைகளினதும் தளபதி என்பதாலும்,இவ்விரு விடயங்கள் தொடர்பாக படையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்னார், அவர்களின் தளபதி என்றவகையில் ஜனாதிபதியுடனும் பேச வேண்டும் என்பதற்காகவுமே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாம்.
அடுத்த நாள் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோருக்குமிடையே ஒரு கலந்துரையாடல் மேற்படி விடயங்கள் தொடர்பாக நடைபெற்றதாம். அந்தக் கலந்துரையாடலில் படையினர் கூறினார்களாம்,’தமிழ் மக்களின் காணிகளை ஏன் படையினர் வைத்திருக்க வேண்டும். ஜனாதிபதி கூறினால் நாங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்போகின்றோம்.
எமக்கு அவ்வாறான உத்தரவுகள் கிடைக்கவில்லை’ என்று கூறினார்களாம். அதையும் கேட்டுக்கொண்டு வெளியில் வந்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் அவர்கள்,படையினர் மக்களின் காணிகளை வைத்திருப்பதில் விருப்பத்துடன் இருக்கவில்லை.
ஆகவே காணிகளை அடையாளம் காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வெண்டும். என்று கூறியிருக்கின்றார். அப்படி என்றால் ஜனாதிபதி உத்தரவிடும் வரையில் மக்களின் காணிகளை ஏன் படையினர் அபரித்து வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.
படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு இடவில்லை என்பது உண்மையாக இருந்தால்,தனது உத்தரவுக்கு இரண்டு வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி கூறியது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி கூறுவது உண்மையாக இருக்குமானால் படையினர் கூறுவது அப்பட்டமான பொய்யாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியை சந்திப்பதாக நேரத்தை ஒதுக்கிக் கேட்கும்போதே என்ன விடயங்கள் பேசப்படப் போகின்றது என்பதை கேட்டுத்தான் ஜனாதிபதியின் நேரம் ஒதுக்கப்படும் அப்படியாயின் கூட்டமைப்பினர் பேச வருகின்ற விடயங்கள் குறித்து ‘நான் இப்படித்தான் பதிலளிப்பேன்’ என்று ஜனாதிபதியும், படை அதிகாரிகளும் தமக்குள் கதைத்து ஒரு முடிவு எடுத்துவிட்டு,’ நான் அடிப்பது போல் அடிப்பேன் நீ அழுவதுபோல் அழ வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டு கூட்டமைப்புக்கு சிறு பிள்ளைத் தனமாக கதை கூறி சுத்திவிட்டிருக்கின்றார்கள்.
இதில் சம்மந்தனையும், மாவையையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும்,சாணக்கிய சட்டமேதையான சுமந்திரன் எப்படி இந்தக் கதைகளை கேட்டுக்கொண்டு வந்தார். அவர்களிடம் திருப்பி ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையா?’நீங்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு நாங்கள் உதவி இருக்கின்றோம். இப்போதும் தமிழ் மக்கள் எங்கள் மீது நாங்கள் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்பதாக தூற்றிக்கொண்டிருக்கின்றபோதும், நாங்கள் நல்லாட்சியுடன் இருக்கின்றோம். அப்படி இருக்கையில் இரண்டு வருடமாக ஜனாதிபதிக்கு படையினரும், அதிகாரிகளும் பதிலளிக்கவில்லை என்று கூறுவது சரிதானா?’ என்று கேட்டிருக்க வேண்டும்.
படையினரிடம் பேசும்போது,ஜனாதிபதி உத்தரவிட்டதாகக் கூறியிருக்க வேண்டும். அல்லது இரண்டு வருடங்கள் தமிழ் மக்களின் பிரச்சினையில் உங்கள் அக்கறைதான் தெரிகின்றது. சரி பரவாயில்லை. இப்போதாவது மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், தமிழ் அரசியல் கைதிகளில் பொது மன்னிப்பு வழங்கக்கூடியவர்களின் விபரத்தை இந்தக் கடிதத்தைக் கொண்டுவரும் எதிர்க்கட்சித் தலைவரிடம் ஒப்படைக்குமாறும் ஒரு கடிதத்தை தருமாறு பெற்றுக்கொண்டு வந்து அதை படையினரிடம் கொடுத்து இப்போது என்ன சொல்கின்றீர்கள்? என்று கேட்டிருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் ஜனாதிபதி அப்படிச் சொன்னார் என்றும், படைத்தரப்பு இப்படிச் சொல்கின்றார்கள் என்றும் கூறுவதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?
இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்; இரண்டு வருடங்களாக ஜனாதிபதியும் அக்கறையில்லாமல் இருந்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அக்கறையில்லாமல்தான் இருந்துவிட்டதா? இப்போது சம்மந்தனும், சுமந்திரனும் எடுத்த முயற்சியை நல்லாட்சி அமையப் பெற்றதிலிருந்து எடுத்திருந்தால், அதில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டியிருந்தால் படையினர் வசமுள்ள தமிழ்மக்களின் காணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கும். சிறைகளில் இருந்து குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றிருப்பார்கள்.
இவ்விடயங்கள் மட்டுமல்லாமல்,இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நல்லாட்சி அமையப்பெற்ற ஆரம்ப காலத்திலிருந்து தமிழர் தரப்பு முயற்சித்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிராளிகள் கூறுவதுபோல்,நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,தமக்கான பதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை மறந்துபோய் இருந்துவிட்டார்கள் என்பததான் உண்மையா?
தமிழ்மக்கள் தெருவில் இறங்கிப் போராடப் புறப்பட்டதாலும், கூட்டமைப்பு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாலுமே இன்று கூட்டமைப்பினர் ஜனாதிபதியையும், படைத்தரப்பையும் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்களா? என்ற கேள்விகள் நியாயமானதுதான் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இப்போது காணிகளைப் பறிகொடுத்த மக்களையும், படையினரையும் சந்திக்கச் செய்து கலந்துரையாடல்களை நடத்தி,இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து அதன் பின்னர் காணிகளை விடுவிப்பதாக கூறப்படுவதை நில மீட்புக்காக போராடும் மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும், கால இழுத்தடிப்பாகவும் தமிழ்மக்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் ஜனாதிபதியும், படையினரும் எல்லா விபரங்களையும் வைத்துக்கொண்டே புதிய விபரங்களைத் திரட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்றால்,அதைப் புரிந்து கொண்டு, சாணக்கியமாக அவர்களின் போக்கில் சென்று காரியத்தை சாதிக்க முடிப்பதைத் தவிர வேறு, தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்க வேறு மார்க்கம் எதுவும் இல்லை. ஆடுகின்ற மாட்டை ஆடிக்கறப்பதற்கும், பாடுகின்ற மாட்டை பாடிக்கறப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.