உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் நோக்கில் அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணம், கண்டி மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கண்டியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரம்பரிய நடனப்பாடசாலைக்கு இந்திய பிரதமர் அடிக்கல் நாட்டி வைப்பார் என நீதியமைச்சர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
எனினும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணம் செல்வது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முறையாக விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.