பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.
இப்போது மட்டுமல்ல… பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்துவிட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பதுதான் வேதனை.
இன்றைய காலகட்டத்திலோ, பெண்கள் நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டாலும், பெண்களுக்குத்தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்கமுடியாத நிஜம். வேலைகளை முடித்துவிட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்துவிடுவதும்கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்குதான்.
இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்ளாது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பதுதான்!
இந்தச் செயல்பாட்டைத் தலைகீழாக மாற்றும்போது, உடல்நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள்.
தூக்கமின்மை காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும்.
ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள். பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம்தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல்நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.