மாவீரர் ஹம்ஸா(ரலி) உஹுத் போரில் உயிரிழந்தார்கள். முஸ்லிம்களுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. இருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். சிறிய படையாக இருந்தாலும் அவர்களின் வீரதீர செயல்களினால், பெரும்படையினர் தங்களது பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை மறந்து சிதறி ஓடத் தொடங்கினர். யுத்தத்தில் பங்கேற்றப் பெண்களும் ஓடிவிட்டனர்.
நபி முஹம்மது(ஸல்) அவர்களின் கட்டளையின் பேரில் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் முஸ்லிம்களைப் பின்புறமாகத் தாக்க வரும் அணியினரைச் சேதப்படுத்தினர். பத்ருப் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே உஹுத் போரிலும் வெற்றியென்று நினைக்கும் வேளையில் அம்பெறியும் வீரர்கள் செய்த தவறினால் நிலை தலைகீழானது.
ராணுவ பாதுகாப்புக்காக நபிகளார் பல கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார்கள், அதில் முக்கியமானது அவர்களின் கட்டளையில்லாமல் வெற்றியோ தோல்வியோ அம்மலையைவிட்டு அம்பெறி வீரர்கள் நகரக் கூடாது என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். அப்படிச் சொல்லியிருந்தும், வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் திரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது.
அவர்கள் மலையைவிட்டு கீழே இறங்கத் தொடங்கினர். உடனே அம்பெறிப் படையின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், அங்கிருந்து நகரக் கூடாது என்று நபிகளார் சொன்னதை வீரர்களுக்கு நினைவூட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் நாற்பதற்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து கீழே பொருட்களை நோக்கி இறங்கினர்.
இதனால் முஸ்லிம் படையினருக்குப் பின் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. தளபதி அப்துல்லாஹ்வும் இன்னும் வெகு சிலரும் மட்டுமே மலையின் மீது இருந்ததைக் கவனித்த எதிரிப் படை வீரர் காலித் இப்னு வலீத், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த மலையை நோக்கி தம் படையுடன் புறப்பட்டார்கள்.
மலை மீது இருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) மற்றும் அங்கிருந்த மற்ற வீரர்களையும் கொன்று குவித்தனர். பின்புறமாக முஸ்லிம் படையைத் தாக்கத் தொடங்கினர். ஓடிக் கொண்டிருந்த எதிரிப் படை வீரர்கள் இதைக் கண்டு தெம்பு வந்தவர்களாக மீண்டும் முஸ்லிம்களை நோக்கித் திரும்பி வந்து தமது கொடியை உயர்த்திப் பிடித்து முஸ்லிம்களைச் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர்.
இதைச் சற்றும் எதிர்பார்த்திராத நபிகளார் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்தவுடன் துணிச்சலான தளபதியாக, தனது குரலை உயர்த்தி “அல்லாஹ்வின் அடியார்களே, என் பக்கம் வாருங்கள்” என்று முஸ்லிம்களை அழைத்தார்கள். எதிரிப்படையினர் நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மக்களைக் காப்பாற்ற நபிகளார் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் குரலை உயர்த்தித் தோழர்களை அழைத்தார்கள்.
முஸ்லிம்கள் நபியவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக எதிரிப்படையினர் வந்து சேர்ந்தனர்.