இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தின் ஆறு இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியுள்ளது.
அதன்படி, சீன மற்றும் ரோமானிய எழுத்துகளை கலந்து, Wo’gyainling, Mila Ri, Qoidengarbo Ri, Mainquka, Bumo La மற்றும் Namkapub Ri ஆகிய பெயர்களை அந்நாடு சூட்டியுள்ளதோடு, இவை அனைத்தும் தெற்கு திபெத் என அழைக்கப்படும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய பெயர் வெளியீட்டுக்கு பின்னர், விரைவில் வரைபடம் ஒன்றையும் சீனா வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, அருணாசல பிரதேசத்தை, தெற்கு திபெத் என்று உரிமை கோரும் சீனாவின் இந்த நடவடிக்கையானது இந்தியா – சீனா இடையிலான நட்புறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், திபெத் நாட்டைச் சேர்ந்த பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவை, அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா அனுமதி அளித்தது. இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன், இதற்கான கடும் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.