சீரடி சாய்பாபாவின் அருளையும் ஆதரவையும் பெற நிறைய பேர் வியாழக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் வியாழக்கிழமை முழு நாளும் பட்டினி கிடந்து பாபாவை வழிபாடு செய்வதுண்டு.
ஆனால் சாய்பாபா தன் பக்தர்கள் யாரையும் பட்டினி கிடந்து தன்னை வழிபடுங்கள் என்று சொன்னதே இல்லை. பட்டினி கிடப்பது என்பது அவருக்குப் பிடிக்காத விஷயமாகும்.
சீரடியில் இருந்த 60ஆண்டுகளில் பாபா ஒருநாள் கூட வைதீக நடைமுறைகளை கடைபிடித்ததில்லை. அது போல அவர் பட்டினி கிடந்து விரதம் இருப்பதற்கும் எந்தவித முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.
பாபா தம் வாழ்நாளில் ஒரு போதும் பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினி இருக்க அனுமதித்ததே இல்லை.
மசூதிக்கு தம்மை பார்க்க வருபவர்களிடம் அவர் ஏதாவது சாப்பிட கொடுப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். குறிப்பாக அன்னதானம் செய்ய சொல்வார். அன்னதானம் செய்பவர்களைக் கண்டால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஒருவரது பசியை தீர்த்து வைப்பது மிகப்பெரிய புண்ணியம் என்று பாபா அடிக்கடி சொல்வார். ஒருவரது வயிறு நிரம்பி இருந்தால்தான் அவரால் ஆத்மார்த்தமாக இறைவனை வழிபட முடியும் என்பது அவரது கருத்தாகும்.
பட்டினி கிடந்து வழிபாடு செய்யக்கூடாது என்பதை பல தடவை, பல சம்பவங்கள் மூலம் பாபா உணர்த்தியுள்ளார். சீரடியில் பாபாவுக்கு மிகவும் பிடித்தமான சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது பிறந்த நாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க பாபாவின் பக்தர்களில் ஒருவரான பாலா சகேப் பாடே என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் பிறந்த நாள் விழாவுக்கு செல்லவில்லை. அதற்கு பதில் அவர் பாபாவைப் பார்க்க மசூதிக்கு வந்தார். பாபா அவரிடம், “என்ன…. பிறந்த நாள் விழா எப்படி இருந்தது? சாப்பாடு சிறப்பாக இருந்ததா?” என்று கேட்டார்.
அதற்கு பாலா சாகேப் பாடே, “இன்று வியாழக்கிழமை அல்லவா? எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன…சாப்பிடக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடே கூறுகையில், “வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும். அன்று நான் சாப்பிடுவதில்லை. இதை நான் ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்டதும் சாய்பாபா சிரித்தார். “இது யார் வகுத்த விதி. யாரை திருப்திப்படுத்த இந்த விதியை கடைபிடிக்கிறீர்கள்?” என்றார். அதற்கு பாலா சாகேப், “நான் வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என் குரு நீங்கள்தான். உங்கள் அருளைப் பெற, உங்களை திருப்திப்படுத்தவே நான் வியாழக்கிழமை விரதம் இருக்கிறேன்” என்றார்.
பாபா அவரையே உற்றுப் பார்த்தார்..” என்னை இன்று நீ திருப்திப்படுத்த வேண்டுமானால் நான் என்ன சொல்கிறேனோ, அதை செய்ய வேண்டும்” என்றார். உடனே பாலா சாகேப், “என்ன செய்ய வேண்டும். உங்கள் உத்தரவை ஏற்க தயாராக உள்ளேன்” என்றார்.
அவரிடம் “மாதவராவ் வீட்டுக்குச் செல். அங்கு நடக்கும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விருந்தில் சாப்பிட்டு விட்டு வா” என்று பாபா உத்தரவிட்டார்.
பாலா சாகேப் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். பாபா விடவில்லை. “நான் உன்னோடுதான் இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்காதே” என்றார்.
பாபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட பாலா சாகேப், உடனே பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டார். அன்று முதல் பாபாவை நினைத்து விரதம் இருக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டார்.
பாபாவை நன்கு அறிந்தவர்கள் யாரும் தங்களை கடுமையாக வருத்திக் கொண்டு உண்ணாநோன்பு இருப்பதில்லை. அதற்கு பதில் ஒன்று அவருக்கு தினமும் மறக்காமல் நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள். அல்லது வியாழக்கிழமைகளில் பாபா ஆலயங்களில் தங்களால் முடிந்த தானத்தை செய்வார்கள். பாபாவும் இதைத்தான் விரும்புகிறார்.
பாபாவை பொருத்தவரை நைவேத்தியம் படைக்காவிட்டாலும், தானம் செய்யாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுவார். அதற்கும் ஒரு சம்பவம் உதாரணமாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த பாபா சாகேப் தர்கட் என்பவர் பாபாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரது மனைவி, மகனும் பாபாவிடம் தீவிர பற்று கொண்டிருந்தனர்.
தர்கட் தினமும் பாபாவுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுவதை பழக்கமாக வைத்திருந்தார். ஒரு தடவை அவரது மனைவி, மகன் இருவரும் சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். முக்கிய வேலை இருந்ததால் தர்கட் மட்டும் வரவில்லை.
மனைவி, மகன் வீட்டில் இல்லாததால் முதல் இரு நாட்கள் கல்கண்டை மட்டும் நைவேத்தியமாக வைத்து பாபாவை தர்கட் வழிபட்டார். மூன்றாவது நாள் பாபாவுக்கு பூஜைகள் செய்த தர்கட் அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாபாவுக்கு எதுவுமே நைவேத்தியம் படைத்து வழிபடாமல் சென்று விட்டார்.
இதனால் தர்கட் மனம் வேதனைப்பட்டது. பாபா படம் முன்பு நின்று மன்னிப்புக் கேட்டார். பிறகு அவர் சீரடியில் இருக்கும் தன் மகனுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். பாபாவுக்கு நைவேத்தியம் படைக்க முடியாமல் போனதற்காக பாபாவிடம் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொள்ள அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் சீரடியில் அவரது மனைவி, மகனிடம் சாய்பாபா மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அவர் தர்கட் மனைவியைப் பார்த்து, “அம்மா… இன்று உன் வீட்டுக்கு சென்றிருந்தேன். கதவு பூட்டப்பட்டிருந்தது. நான் உள்ளே நுழைந்து சென்று பூஜை அறையில் பார்த்தேன். நான் சாப்பிட்டு பசியாற உன் கணவர் எனக்கு எதையுமே வைக்கவில்லை. எனவே நான் பசியோடு திரும்பி வந்து விட்டேன்” என்றார்.
பாபா இவ்வாறு சொன்னதும் தர்கட்டின் மனைவி, மகன் இருவருக்கும் தங்கள் வீட்டில் பாபாவுக்கு செய்யப்பட்ட பூஜையில் ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இதனால் தர்கட்டின் மகன் உடனே மும்பைக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்தார். பாபாவிடம் அவர் விடை பெற அனுமதி கேட்டார்.
ஆனால் சீரடியில் இருந்து இப்போது புறப்படக்கூடாது என்று பாபா தடை விதித்து விட்டார். இதனால் தர்க்கட்டுக்கு அவரது மகன் ஒரு கடிதம் எழுதி போட்டார்.
மறுநாள் இரு கடிதங்களும் அவரவர் கைகளில் கிடைத்தன. அப்போதுதான் தர்கட்டுக்கும் அவரது மகனுக்கும் அனைத்தும் தெரிய வந்தன.
பாபாவின் உண்மையான பக்தர்கள், இந்த உலகின் எந்த நாட்டில், எந்த மூலையில் இருந்தாலும், அவர்களது அன்பையும், அன்புடன் அவர்கள் தரும் நைவேத்தியத்தையும் பாபா ஏற்றுக் கொள்வார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். பாபா சீரடிக்கு வந்த போது, தொடக்க காலத்தில் அவருக்கு லட்சுமிபாய் என்ற பெண்மனிதான் தேடி, தேடி உணவு கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். பாபா சாப்பிடாமல் லட்சுமிபாய் சாப்பிட மாட்டார். பாபா எங்கு சென்றாலும் அவரைத்தேடி கண்டுபிடித்து உணவு வழங்குவார்.
ஒருநாள் பாபா, லட்சுமிபாயிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது என்றார். உடனே லட்சுமிபாய் அவசரம் அவசரமாக ரொட்டி தயாரித்து எடுத்து வந்து பாபாவிடம் கொடுத்தார். பாபா அந்த ரொட்டித் துண்டுகளை வாங்கி, சிறிது சிறிதாக பிய்த்து அருகில் நின்ற நாய்க்கு போட்டார். எல்லா ரொட்டிகளையும் நாய் சாப்பிட்டு விட்டது.
இதை கவனித்த லட்சுமிபாய், “என்ன பாபா… இந்த உணவை நான் உங்களுக்காகத்தானே எடுத்து வந்தேன். நீங்கள் நாய்க்கு போட்டு விட்டீர்களே” என்றார் வேதனையுடன். அப்போது பாபா, “நாயின் பசியைப் போக்குவது என்பது என் பசியைப் போக்குவது போன்றதே” என்றார். அப்போதுதான் பாபா, இந்த உலகில் எல்லா உயிரிலும் வியாபித்து இருப்பது புரிந்தது.
நாயின் பசியை தம் பசியாக அவர் நினைத்தார். அதனால்தான் பசிக்கு அவர் உடனுக்குடன் தீர்வு காண்டார். அப்படிப்பட்ட சாய்பாபா… எப்படி தம் பக்தர்கள் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பதை அனுமதிப்பார்?
என்றாலும் உலகம் முழுவதும் வாழும் சீரடி சாய்பாபா பக்தர்களிடம் 9 வார விரதமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த 9 வாரமும் வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு எப்படி பூஜை செய்ய வேண்டும், என்னென்ன நைவேத்தியம் படைக்கலாம் என்றெல்லாம் விரத விதி முறைகள் உள்ளன. 9-வது வாரம் அன்னதானம் வழங்க வேண்டும் என்று விரத விதிமுறைகளில் வகுத்து வைத்துள்ளனர்.
அந்த 9 வார விரதமுறை எப்படி தோன்றியது என்பது பற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை)விரிவாக காணலாம்.