கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டத்திற்கு பின்னர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களில் பாதிப்பேர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
திரும்பி வருபவர்களை தரம்பிரித்தே மீண்டும் இணைத்து கொள்வோம். இணைத்து கொள்ள கூடியவர்களும் இருக்கின்றனர். இணைத்து கொள்ள முடியாதவர்களும் இருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்த தயாராகி வருகிறது. அப்படி ஒழுக்காற்று விசாரணை நடத்தினால் இலங்கையில் இருக்கும் கோப்புகள் போதாது.
ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கையில் உள்ள சகல சுதந்திரக் கட்சியினரின் விண்ணப்பங்களும் நிரப்பட வேண்டும் என்பதே இதற்கு காரணம்.
அதேபோல் இந்த அரசாங்கம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது. அரசாங்கம் தற்போது வால் உடைந்து போன பாம்பு போல் எவரையாவது தீண்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
எந்த வேலைத்திட்டமும் இல்லாத அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.