பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லாத காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் 25 வயதான பிரியன்னா ரோலின்ஸ் கடந்த ஆண்டில் மூன்று முறை எங்கு இருக்கிறேன் என்ற தகவலை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியதற்காக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் நேற்று அறிவித்தது. இதற்காக அவரது ஒலிம்பிக் பதக்கம் பறிக்கப்படாது. ஆனால் ஆகஸ்டு மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது.