இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது.
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.
இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங் குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வுபெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.