அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான, திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு, வரும் ஏப்ரல் 25ஆம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துறைமுகங்கள் அமைச்சு மற்றும் ஏனைய தரப்புகளின் யோசனைகளைக் கருத்தில் கொண்டு உடன்பாட்டு வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடும் காலத்தை 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக்கம் 60 வரையான ஆண்டு காலத்துக்கு குறைக்கும் வகையிலும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளிக்கும் வகையிலும், குத்தகை உரிமையை, 80 : 20 என்ற விகிதத்தில் இருந்து, 60 : 40 அல்லது 51 : 49 எனக் குறைக்கும் வகையிலும், துறைமுகத்தின் பாதுகாப்புக்கு சிறிலங்காவே பொறுப்பு என்ற வகையிலும் உடன்பாட்டு வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவை சிறப்பு திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவையில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.