Loading...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு இந்தூரில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடியது. இதில் அம்லாவின் (104 ரன்) சதத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி பார்த்தீவ் பட்டேல் (37 ரன்), ஜோஸ் பட்லர் (77 ரன்), நிதிஷ் ராணா (7 சிக்சருடன் 62 ரன்) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 15.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. மும்பை அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும்.
தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்த பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘2014-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் 195 ரன்கள் இலக்கை 15 ஓவருக்குள் ‘சேசிங்’ செய்திருந்தோம். அதை இந்த ஆட்டம் நினைவுப்படுத்தியது. இன்னிங்ஸ் இடைவெளியில் ஓய்வறைக்கு திரும்பிய போது, வீரர்கள் மத்தியில் பேசினேன். ‘இது சிறிய மைதானம். அதனால் இலக்கை எட்டி விட முடியும். அதிரடியான ஷாட்டுகளை ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் நம்மிடம் இருக்கிறார்கள்’ என்று உற்சாகப்படுத்தினேன். ஜோஸ் பட்லரும், பார்த்தீவ் பட்டேலும் விளையாடிய விதம் வியக்க வைத்தது. இந்த வெற்றிப்பயணத்தை தொடர்ந்து நீட்டிக்க முடியும் என்று நம்புகிறோம். குறிப்பிட்ட அணிக்கு எதிராக கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதையே மீண்டும் செய்வோம்’ என்றார்.
Loading...