இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களின் சுகாதார அமைச்சுக்களில் தனக்கென ஒரு நீண்டகால தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தை தயாரித்து அதன் அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரே மாகாண அமைச்சு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பதில் பெருமையடைகின்றேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மல்லாவி ஆதார வைத்திசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டடத்தொகுதியை நேற்று முன்தினம் திறந்து வைத்து உரையாற்றியபோதே மாகாண அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபை என்ன செய்தது என்று குறைகளை மட்டுமே கூறிவருபவர்களுக்கு ஒன்றை திட்டவட்டமாக கூறவிரும்புகின்றேன். சுகாதார அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் நவீன விஞ்ஞான முறையிலான திட்டமிடலை துறைசரர் நிபுணர்களுடன் கலந்துரையாடி முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக 17 துறைசார் உபகுழுக்களை அமைத்து அவர்களின் ஆலோசனைக்கமைவாக நீண்டகால தந்திரோபாய திட்டமொன்றினை தயாரித்துள்ளோம்.
மாகாண சுகாதார அபிவிருத்தி தொர்பாக தயாரிக்கப்பட்ட இந்த மூன்றாண்டு செயற்திட்டத்தினடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றோம்.
இன்று இந்த வைத்தியசாலையில் ரூபா 15 மில்லியன் செலவில் சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை திறந்து வைத்துள்ளோம். தற்போது இந்த வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிக விரைவில் அதனையும் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளோம். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் ஒரு புனர்வாழ்வு வைத்தியசாலையொன்று அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் கொடிய யுத்தததினால்; அங்கவீனமடைந்த எமது உறவுகள் பயன்பெறமுடியும். இதுவும் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது நவீன வசதிகளைக்கொண்ட புனர்வாழ்வு
வைத்தியசாலையாகும். இதற்கான நிதியுதவி நெதர்லாந்து அரசினால் வழங்கப்படவுள்ளது. இங்கு ஹைரோதெறப்பி முறையிலான சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார்.
மல்லாவி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.