செரீனாவுக்கு பிறக்க போகும் குழந்தை குறித்து இனவெறி கருத்து தெரிவித்ததால் ருமேனியாவை சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான லீ நாஸ்டாஸ் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
முன்னணி டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டத்தை வென்ற பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடாத 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் செரீனா வில்லியம்சுக்கு பிறக்க போகும் குழந்தை குறித்து குறும்பாக கருத்து சொல்லி ருமேனியா நாட்டை சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீரரான லீ நாஸ்டாஸ் பலத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து-ருமேனியா அணிகள் இடையிலான போட்டி அட்டவணை குறித்த குலுக்கல் (டிரா) ருமேனியாவில் உள்ள கான்ஸ்டான்டாவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பிடம், செரீனாவின் கர்ப்பம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது அருகில் இருந்த ருமேனியா அணியின் விளையாடாத கேப்டனான 70 வயது லீ நாஸ்டாஸ் கருத்து தெரிவிக்கையில், ‘செரீனாவுக்கு பிறக்க போகும் குழந்தை என்ன நிறத்தில் இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அது பால் கலந்த சாக்லெட் நிறமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். செரீனா கருப்பர் இனத்தை சேர்ந்தவர். அவரை மணக்க இருப்பவர் வெள்ளை இனத்தை சார்ந்தவர். இதனை குறிக்கும் வகையிலேயே நாஸ்டாஸ் வில்லங்கமாக கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீரரான லீ நாஸ்டாஸ்சின் இனவெறி கருத்து பலத்த சர்ச்சையாக உருவெடுத்து இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இது குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இனவெறி தொடர்பான கருத்து மற்றும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ருமேனியா அணியின் கேப்டன் லீ நாஸ்டாவின் தரக்குறைவான கருத்து குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. முழு உண்மையை அறிந்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செரீனா வில்லியம்ஸ் பற்றிய லீ நாஸ்டாஸ்சின் சர்ச்சைக்குரிய விமர்சனத்தை பதிவு செய்த இங்கிலாந்து நிருபரை லீ நாஸ்டாஸ் கடுமையாக சாடினார். ஏன் இப்படி முட்டாள்தனமாக செயல்பட்டீர்கள் என்றும் நேரில் திட்டினார்.