சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து ‘பாகுபலி–2’ படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளன.
பாகுபலி–2
பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்து ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி–2’ படம் இந்த மாதம் இறுதியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் திரைக்கு வர இருக்கிறது. பாகுபலி முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியதால் இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் ‘பாகுபலி–2’ படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
காவிரி பேச்சு
நடிகர் சத்யராஜ் காவிரி பிரச்சினையில், கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்காக மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை திரையிட அனுமதிப்போம் என்று கெடு விதித்தன. சத்யராஜ் உருவபொம்மையை எரித்தும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பாகுபலி–2 படத்தை திரையிட வேண்டாம் என்று கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு கடிதங்களும் அனுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் வாபஸ்
பாகுபலி–2 படத்தின் டைரக்டர் ராஜமவுலி, படத்துக்கும் சத்யராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் இந்த படத்தின் தயாரிப்பாளரோ இயக்குனரோ இல்லை என்றும் விளக்கம் அளித்தார். கர்நாடகாவில் படம் வெளியாகாவிட்டால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்றும் எனவே படத்தை திரையிட கன்னட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதனை கன்னட அமைப்புகள் ஏற்காமல் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தன. இதைதொடர்ந்து சத்யராஜ் தனது பேச்சுக்காக கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பாகுபலி–2 படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் நேற்று அறிவித்தார். இதர கன்னட அமைப்புகளும் எதிர்ப்பை கைவிட்டன.
கமல்ஹாசன் பாராட்டு
வருத்தம் தெரிவித்ததற்காக சத்யராஜை நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டினார். மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன் என்று அதில் அவர் கூறியிருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் சத்யராஜுக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.