விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எலிக்கறி, பாம்புக் கறி சாப்பிட்டது, பாதி தலை மொட்டையடித்தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எதை செய்தும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை.
இதன் உச்சமாக நிர்வாணமாக தெருவில் ஓடிச் சென்று போராட்டம் நடத்தி அதிர்ச்சியளித்தனர் விவசாயிகள். அப்போதும் மோடி இவர்களை சந்தித்து குறைகளை கேட்க நேரம் ஒதுக்காமல் பேரதிர்ச்சியை பரிசாக அளித்தது.
போராட்டம் நடத்த தொடங்கி சுமார் 40 நாட்களாகும் நிலையிலும், தங்களை மோடி அழைத்து பேசவில்லை என்பதால் கோபமும், விரக்தியுமடைந்துள்ள விவசாயிகள் யாரும் செய்ய நினைத்து பார்க்காத ஒரு விஷயத்தை இன்று செய்துள்ளனர்.
தங்கள் சிறுநீரை தாங்களே குடித்து தங்கள் கையறு நிலையை படம் பிடித்து காட்டியுள்ளனர். நினைத்து பார்க்கும்போதே நெஞ்சம் துடிக்கும் செயல் இது. தண்ணீரின்றி கஷ்டப்படும் மக்களும், விவசாயிகளும் இனி சிறுநீரை குடித்துதான் உயிர்வாழ வேண்டும் என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் செயலிலேயே காட்டிவிட்டனர்.
தேசம் முழுக்க மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது விவசாயிகளின் இந்த போராட்டம். ஆனால் இதன்பிறகும் பிரதமர் மோடி தன்னை சந்திக்க இந்த விவசாயிகளுக்கு நேரம் கொடுக்கவில்லை. சிறுநீரை குடித்த ஒரு அவமானத்தைவிட, பெரும் அவமானம் இதுதான்.
மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், மக்களுக்கு சோறுபோடும் விவசாயி சிறுநீரை குடித்த பிறகும் எட்டிப்பார்க்க மனது வரவில்லையென்றால், இந்த அவமானம் விவசாயிகளுக்கு அல்ல, ஆளும் அரசாங்கத்திற்கே.
ஆயுதம் ஏந்தாத போராட்டங்களுக்கு அரசியல் சாசனமே அனுமதி வழங்கியுள்ளது. இந்த உரிமையை கையிலேந்திதான் விவசாயிகள் ஒற்றை கோரிக்கையுடன், இந்த வெயிலிலும், மழையிலும் தங்கள் உடலை வருத்தி ஏங்கி தவிக்கின்றனர். மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசோ, அவர்களை நிர்வாணப்படுத்தியும், சிறுநீரை குடிக்க விட்டும் ரசித்துக் கொண்டுள்ளது.