அமெரிக்க கடற்படை அதிகாரிகள் முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படையினருக்கு பயிற்சியை வழங்கியிருக்கின்றார்கள். ஐ.நாவிலே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சில பிரேரணையை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இந்த மண்ணிலே அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவான வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள், அடுத்தது என்ன..? எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட மாகாண கல்வி அமைச்சர் பாடசாலைகளில் இராணுவ பிரசன்னம் இல்லை என்று சொல்கின்றார். ஆனால் இன்றும் பல பாடசாலை நிகழ்வுகளில் இராணுவத்தினை அழைக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
இது வடமாகாண கல்வி அமைச்சர் வாகனத்தில் செல்லுவதனால் தெரியவில்லை போல் உள்ளது. நாங்கள் நடத்துகின்ற அறவழி போராட்டங்கள் அனைத்திலும் இராணுவத்தினரதும், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பும், அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த சூழல் மாறிவிட்டது என்ற தோரணையை மக்களுக்கு சொல்லி விட முடியாது.
தடுமாறும் தமிழ் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் என்பது கேள்வியாக இருக்கத்தேவையில்லை அது விடையாகவே போகலாம். ஏனெனில் என்னைப்போன்ற பாதிக்கப்பட்ட தமிழர்கள் தளர்வடைந்து விட்டோம் என்பதுதான் உண்மையான செய்தி.
அண்மையில் ஐ.நாவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக 02 வருட கால நீடிப்பை வழங்கியதற்கு எதிராக பல நாடுகளுடனும், மனித உரிமை அமைப்புக்களுடனும் கலந்துரையாடி இருந்தோம்.
அப்போது அவர்கள், அந்நாடுகள் கூறிய கருத்து நீங்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கூட உங்களது கட்சியின் தலைமை இரண்டு வருட கால அவகாசத்தை கொடுக்கச்சொல்லி கூறுகிறார்கள்.
அதுவும் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் மற்றும் பேசவல்லவர்களாகவும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
போர் முடிந்த பின்னர் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் கூட அமெரிக்க அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கொண்டு வந்த 30.1 தீர்மானத்தில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மீண்டும் இரண்டு வருட காலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டவர்களிற்கு இது எவ்வாறு இருக்குமோ தெரியவில்லை? ஆனால் என்னைப்போன்ற பாதிக்கப்பட்டவர்களிற்கு மிகவும் சோர்வான தளர்வான நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த 30.1 தீர்மானத்திலே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணி விடுவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அத்தீர்மானத்தின் படி முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கடற்படைத்தளம் இலங்கையின் பிரதான கடற்படை தளமாக அந்த கிராமத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக் கடற்படை தளம் இலங்கையில் முதலாவது கடற்படை தளமாக இப்பொழுது வந்துள்ளது. அண்மைய காலங்களில் அப்பகுதியில் சில வாரங்களாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் அங்குள்ள கடற்படையினருக்கு பயிற்சியை வழங்கியிருக்கின்றார்கள்.
ஐ.நாவிலே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சில பிரேரணையை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இந்த மண்ணிலே அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவான வேலைத்திட்டங்களை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனை பார்க்கின்ற போது ஐ.நாவிலே போய் நாங்கள் பேசுவது எல்லாம் ஒரு வீணான செயல் என்று தோன்றுகின்றது.
எனது மகள் கூறினார் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீங்கள் ஐ.நாவிற்கு போய் பிரச்சினையை கிளப்பிக்கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள் ஐ.நா சென்று கூறுவதற்கு பதில் கூறுவது மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன். ஐ.நாவில் இருந்து கூறுவது போல் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றது.
நீங்கள் அங்கு செல்வதை விட நீங்கள் ஐ.நாவே அவர்தான் என்று இங்கேயே கதைத்திருக்கலாம். நாங்கள் தெருவழிகளில், நில மீட்புக்கான போராட்டம், காணாமல் போனவர்களிற்கான போராட்டம் என பல போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.
ஜனாதிபதி, பிரதமர், அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி தலைவர் என்ற அதிகாரமிக்க பதவியில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தர் ஐயா உள்ளார்.
ஆனால் எங்களுடைய விடயத்தில் அவர் வாய் திறக்காது மௌனமாக இருப்பது என்பது எங்களிற்கு அதிருப்தியாகவும் வேதனையாகவும் உள்ளது.
2012ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஐ.நாவிலே தங்களிடம் சரணடைந்து காணாமல் போனவர்களில் பெயர் வெளியிடப்படாதவர்களின் பட்டியலினை வெளியிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.
அதன் பின்னரும் ஜெனிவா காலத்தில் அவர் இருந்தார். ஆனால் எங்களது தலைமை அந்த பட்டியலினை கேட்கவில்லை. இன்று வரையும் அந்த பட்டியலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்கவில்லை.
நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொ ண்டுதான் இருக்கின்றோம். அண்மைக்காலங்களாக அரசியல் தலையீடு இன்றி மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அடுத்து என்ன என்ற கேள்விக்கு மக்கள் சரியான ஒரு முடிவினைஎடுப்பார்கள் என நினைக்கின்றோம்.
என்னதான் அரசியல் தீர்வு கிடைக்கும் என எண்ணினாலும் கூட நாங்கள் நினைக்கின்ற, எதிர்பார்க்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வு எங்களிற்கு கிடைக்காமல் போய்விடும் என்ற வருத்தம் எங்களிற்கு இருக்கின்றது.
ஐ.நாவில் குறிப்பிட்டதை நிறைவேற்றுகின்றோம் என வாக்குறுதி கொடுப்பதும், அந்த வாக்குறுதி பேசப்படுகின்ற அதே சம நேரம், இங்கிருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களும் சரி எங்களிற்கு எதிராக இங்கே போர் குற்றம் எதுவும் நடைபெறவில்லை என பேசுவதும் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது, நாங்களே குற்றங்களை நடாத்தி விட்டு நாங்களே இவர்களிற்கு விசாரித்து நீதியை வழங்குகின்றோம் என சொல்வதும் நல்ல ஆரோக்கியமான சூழலாக தெரிய வில்லை என்றார்.