நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் உலக நாடுகளுக்கு உதாரணமாக இலங்கை விளங்குகின்றதென சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன தெரிவித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிததுள்ளார்.
வொஷிங்டனில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்டேயை (Christine Lagarde) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டு எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்கும் காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ளதென, குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருடனான சந்திப்பின்போது, இலங்கைக்கு மூன்றுவருட நீடிக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பான இரண்டாவது ஆய்வு தற்போதைய வசந்தகால கூட்டத்தொடரின் போது இடம்பெறவுள்ளதோடு, அதன் பின்னர் அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கையொன்று இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.