யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கான நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கு அரசியல் தலையீடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பணியாற்றி வருகின்றார்.
வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தற்காலிகமாக அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
2017 பெப்ரவரி 26ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக தேர்தல் நடத்தப்பட்டது.
குறித்த தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பேராசிரியர் எஸ்.சிறீஸ்கந்தராஜா, பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன், பேராசிரியர் ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள், பரிந்துரைக்கப்பட்டன.
இருப்பினும் வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் தமது விருப்புக்குரியவரைத் துணைவேந்தராக நியமிப்பதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளன என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக, புதிய துணைவேந்தர் நியமனம் தாமதமாகியுள்ளதால் தற்போதைய துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் சேவை காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.