இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையினை வழங்குவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் திருப்திகரமான நிலைமைகள் காணப்படவில்லை எனத் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் 50 பேரைக் கொண்ட குழு ஒன்றினால் மேற்படி யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவதற்கான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் உரிய முறையில் நிறைவேற்றவில்லலை என குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இலங்கையில் நீடிக்கும் மனித உரிமை மீறல் சம்பங்கள், தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பயங்கரவாதச் சட்டம் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை மேற்படி குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்டது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட பல மாற்றங்களை சுட்டிக்காட்டி இலங்கை அரசாங்கம் குறித்த வரிச்சலுகையை பெறுவதற்கு முயற்சித்து வருவதோடு, பல சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. எனினும், இலங்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டி, இவ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கக் கூடாதென புலம்பெயர் சமூகங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.