அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் புதிய இந்தியா திட்டம் (New India ) சாத்தியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 13 முதலமைச்சர்கள், 5 துணை முதலமைச்சர்கள், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில், அவர் மத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயோக் செயற்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்களும் இதில் உள்ளனர்.
மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. எனவே அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயற்படுவதன் மூலம் புது இந்தியா திட்டம் சாத்தியமாகும்.
மேலும் ஜி.எஸ்.டி மசோதாவானது, ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. அந்தவகையில், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.