புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி களம் இறங்கியது.
புனே அணியின் வெற்றிக்கு ஒரு கட்டத்தில் 23 பந்தில் 56 ரன்கள் தேவைப்பட்டது. டோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடியதாக டோனி மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு தன்னுடைய ஸ்டைலில் போட்டியை முடித்து வைத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்த போட்டியில் 34 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
டோனியின் அபார ஆட்டத்திற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளனர்.
டோனியின் ஆட்டம் குறித்து விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘அதிகப்படியான நம்பிக்கையுடன் டோனி இதுவரை என்ன செய்து வந்தோரோ, அதை சிறப்பாக செய்தார். என்ன அருமையான சாம்பியன் ஆட்டம். பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது (Ms Dhoni does what he’s done with so much confidence over the years. What a champion knock. Great to watch)’’ என்று பதிவு செய்துள்ளார்.
ரவி சாஸ்திரி தனது டுவிட்டர் பகுதியில் ‘‘டோனி ஆட்டத்தை முடித்து வைத்ததில் புதியதாக ஏதும் அடங்கவில்லை. ஜாம்பவான், தனது பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார்’’ பதிவு செய்துள்ளார்.