கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என கடந்த 2014-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்‘. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கமலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு கமலும் விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் கஷ்டப்படவே, ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதால், ‘விஸ்வரூபம்-2’ படத்தை வெளியிட கமல் முயற்சி எடுத்து வருகிறார். தயாரிப்பாளருடன் ஒருவழியாக சமதான பேச்சுவாத்தை நடத்தி படத்தின் வேலைகளை மறுபடியும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளையும், பிற பணிகளையும் தொடங்கியிருப்பதாக கமலுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, வரும் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.