இறுதி யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு மக்கள் தமது உறவினர்களை இராணுவத்தின் முன்னிலையில் கையளித்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள இராணுவம் மறுக்கின்றதால், அதுகுறித்து போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரியவில்லை எனக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன், இதற்காகத்தான் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என்றும் அதனை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை உவர்மலையிலுள்ள விடுதியொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இவ் அலுவலகத்தை செயற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள போதிலும், இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவார்கள் என்று ஆராயவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதிக்கு தான் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதோடு, பத்திரிகைகளில் வெளியாகியிருந்த காணாமல்போனோரின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியதாகவும், இவ்விடயம் தொடர்பாக தன்னிடம் விரைவில் பேசுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.