இலங்கையில் குப்பை அரசியல் சூடுபிடித்துள்ளது. மீதொட்டமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் இருந்து அரசியல் குப்பையாகக் கிடந்த இலங்கையில் இப்போது குப்பை அரசியல் முன்னரங்கிற்கு வந்துள்ளது.
மீதொட்டமுல்லையில் குப்பை கொட்டுவதென்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் வழக்கமாகும். இடைக்கிடையே ‘அங்கே குப்பைகளைக் கொட்ட வேண்டாம்’ என்று அப்பகுதியில் வாழும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள். பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாளித்து மீண்டும் அங்கேயே குப்பைகளைக் கொட்டுவார்கள்.
பிறகு அப்பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியேற்றம் செய்யப்போவதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒரு நடவடிக்கைகை எடுப்பார்கள் அதற்கு அந்த மக்கள் எதிர் நிலைப்பாடு எடுப்பார்கள்.
இவ்வாறாக மீதொட்டமுல்லையில் வழமையான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது அந்தக் குப்பை மேடு சரிந்து அதில் அகப்பட்டு 30க்கு அதிகமானவர்கள் பலியாகியும், சிலரைக் காணவில்லை என்றும் கூறப்படுவதுடன், வீடுகள் சேதமடைந்ததால் 645 குடும்பங்கள் அநாதரவாகியிருக்கும் நிலையில் மீதொட்டமுல்லை பிரச்சினை பிரதானமாக இருக்கின்றது.
இதற்கிடையே நாளாந்தம் கொழும்பில் சேகரிக்கப்படும் 800 முதல் 1200 தொன் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பது தொடர்பான சர்ச்சைகளும், அதற்கு சட்ட வரைபுகளுமாக அரசாங்கத்தைச் சுற்றி பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
சரிந்து விழுந்தது குப்பைமேடாக இருந்தலும் அது பெரும் சக்தி என்பதையும், அந்தச் சக்தியை ஆக்கச் சக்தியாக பயன்படுத்தவும் அரசாங்கம் தெளிவான திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும். குப்பையைம், கழிவையும் மீள் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. எனவே குப்பைகளை ஆக்கச் சகதியாக மாற்றும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. மகிந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை தற்போதைய அரசாங்கம் சுமத்தவும் முயற்சித்தது. மத்திய, மாகாண அரசாங்கங்களிடையே இணக்கமின்மையே இவ்வாறான பிரச்சினைக்குக் காரணம் என்று மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
இவ்வாறாக ஆளுக்கு ஆள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதும், பிரதமர் ரணில் விக்ரம சிங்க அந்த இடத்திற்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் நடந்த அனர்த்தத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்கின்றது என்றும், நஸ்ட ஈடுகள், வீடுகள் அமைத்துக் கொடுத்தல் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகலதையம் அரசாங்கம் உடனடியாக செய்யும் என்றும் கூறியிருந்தார்.
பிரதமரின் பொறுப்பான அந்த செயற்பாட்டை பலரும் பாராட்டியிருந்தார்கள். நல்லாட்சி அரசாங்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்போடு நடத்திச் செல்கின்றார் என்ற கருத்தை மீண்டும் பிரதமர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி என்பவர் செயற்திறன் அற்றவராகவே இருப்பதை அவரே வெளிப்படுத்துகின்றார். அரசியல் திருத்த வரைபுகளை தயாரிப்பது, சர்வதேச பொருளாதார முதலீட்டாளர்களை ஈர்ப்பது, உட்பட அரச இயந்திரத்தின் எந்தப் பகுதியையும் இயக்குகின்றவராக ஜனாதிபதி செயற்படவில்லை.
ஜனாதிபதின் அதிகாரம் செல்லுபடியற்றதாகியிருப்பதை, தமிழ் மக்களின் காணி விடுவிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் விடுத்த உத்தரவுகளுக்கு இரண்டு வருடமாக படையினரோ, அதிகாரிகளோ செவிசாய்க்கமால் இருந்ததை ஜனாதிபதியே கூறியதிலிருந்து தெரிந்துகொள்ளமுடியும்.
நல்லாட்சி அரசாங்கத்தை அரசியல் ரீதியாக தாக்கும் ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் வியூகமானது பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பொறுப்பேற்பினால் தற்காலிகமாக மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் குப்பை அரசிலை விவாதம் நடத்த வேண்டும் என்று ஒன்றினைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கைவிடுத்தது. அந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு 24ஆம் திகதிவரை அரசாங்கம் ஓய்வு கொடுத்துள்ளது. இல்லாவிட்டால் குப்பை அரசியல் விவாதங்களால் நாடாளுமன்றம் நாறிப்போயிருக்கும்.
நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது மீதொட்டமுல்லை குப்பை அரசியல் நிச்சயமாக பிரதான இடம்பிடிக்கும். இதற்கிடையே எதிர்வரும் தொழிலாளர் தினம் தொடர்பான அரசியல் கட்சிகளின் பரபரப்புக்களும் தொடங்கியுள்ளது. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கு கொழும்பு காலி முகத்திடலை வழங்குவதற்கு பிரதமரே உத்தரவுகளை வழங்கியிருப்பதுதான்.
நல்லாட்சி அரசின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி கெம்பல் பார்க்கிலும், சுதந்திரக்கட்சி கண்டி கெட்டம்பே மைதானத்திலும் தமது மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்றார்கள். இதுவும் ஒரு அரசியல் விளையாட்டுத்தான்.
இந்த இரு கட்சிகளும் தமது மக்கள் ஆதரவைக் காட்டுவதற்கு சிறிய மைதானங்களை தெரிவு செய்துள்ளனர். இவை சிறிய மைதானங்கள் அங்கே 5000 பேரை திரட்டினாலே அது பாரிய சனக்கூட்டமாகத் தெரியும். ஆனால் காலி முகத்திடலில் 5000 பேரை திட்டினாலும் அது சிறிய மக்கள் கூட்டமாகவே தெரியும் அவ்வாறு நடந்தால் தாம் நடத்திய மேதினக் கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தார்கள் என்றும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் பிசுபிசுத்துப்போய்விட்டது என்றும் கூறலாம் என்பதே பிரதமரின் நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் கொழும்பு காலி முகத்திடலில் மக்களை பெருமளவில் கூட்டி மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் உத்வேகமும், ஒழுங்கமைக்கும் அனுபவமும் ஒன்றினைந்த எதிர்க்கட்சியிலிருப்பவர்களுக்கு கை வந்த கலையாகும். ஆகவே ஒன்றினைந்த எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை தாம் நடத்தப்போவது வெறுமெனவே மேதினக் கூட்டம் அல்ல.
அதனூடாக சர்வதேச சமூகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் தமது பலத்தையும், தாம் மீண்டு எழுந்துவிட்டதான செய்தியையும் பறைசாற்றுவதே பிரதான நோக்கமாகும்.
அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கும், பிரதமரின் குள்ளநரித்திட்டத்தை முறியடித்து அவரது முகத்தில் கரியைப் பூசுவதற்குமே ஒன்றினைந்த எதிர்க்கட்சியினர் உச்சபட்ட முயற்சியை எடுப்பார்கள் என்று தெரிகின்றது.
இவ்வாறு அரசியல் கட்சிகளின் போட்டாபோட்டியில் சிக்கி இருக்கும் தொழிலாளர் தினமானது, தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தினம் என்ற நோக்கத்திற்கானதாக அமையாமல், முதலாளி வர்க்கத்தினரினதும், அரசியல்வாதிகளினதும் கைகளில் சிக்குண்டு மேதினத்தின் தொனிப்பொருளை இழந்துவிடும் நிலையே இருக்கின்றது.