கேப்பாபிலவு இராணுவ முகாமை மாற்றி அமைப்பதற்கும் மன்னார் முள்ளிக்குளத்தில் உள்ள விவசாய காணிகளை விடுவிப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகள் கிடையாது எனவும் அதற்கான நிதி கிடைத்து ஆறு வாரங்களில் குறித்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தமது முகாமை மாற்றி அமைப்பதற்கான காணி மற்றும் நிதி உதவிகள் கிடைத்ததும் தாம் காணிகளை விடுவிப்போம் என இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இராணுவத் தளபதி உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை, கேப்பாப்பிலவு இராணுவ முகாம் அமைந்துள்ள 189 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதாயின் மாற்று காணியை பெற்றுக்கொள்வதற்கான நிதி கிடைத்து 6 வாரத்தில் தாம் காணிகளை விடுவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காணிகளை பெற்றுக் கொள்வதற்கும் இராணுவ முகாமை அமைப்பதற்குமான நிதியை தாம் பெற்றுத் தருவதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொண்டமானாற்றில் இருந்து பருத்தித்துறை வரையான பாதையை விரைவில் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைலிட்டிச் சந்திக்கு அருகில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் ஆராயப்படும் எனவும் இராணுவ தளபதி இதன் போது தெரிவித்தார்.