பெற்றோலியத் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நிரந்தரமாக தீர்த்து வைக்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் “ பெற்றோல் தாங்கிகள் எதையும் இந்தியாவிற்கு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை. பெற்றோலியத் துறை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனையடுத்தே, ஜனாதிபதியிடம் சென்றுள்ளனர். ஜனாதிபதி இது தொடர்பில் தனக்கு தொடர்பில்லை என்றும் இதனை பிரதமருடன் பேசி தீர்த்துக் கொள்ளுமாறும் தெளிவாக கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைக்குச் சென்று சீனாவுக்கு வழங்கப் போவதாகவும் திருகோணமலைக்குச் சென்று இந்தியாவுக்கு வழங்கப் போவதாகவும் பின்னர் ஏதாவதொன்றை ஜப்பானுக்கு வழங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
இந்த நிலையில், அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, பெற்றோலியப் பிரச்சினைக்கு பிரதமர் தான் தீர்ப்பு வழங்க வேண்டிவராக காணப்பட்டார்.
இதன் காரணமாகவே, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தாமல் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் இதற்கான நிரந்தர தீர்வை பிரதனரே பெற்றுக் கொடுக்க வேண்டும்.” என அவர் மேலும் கூறினார்.