டெல்லி ராஜாஜி மார்க்-ல் உள்ள 10-ம் எண் இல்லத்தை முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம், தன்னுடைய வாழ்க்கையின் இறுதிக்காலம் வரை பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அந்த வீடு அப்துல் கலாம் நினைவு அறிவுசார் மையமாக மாற்றப்பட வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.
மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத மத்திய அரசு அந்த வீட்டை கலாச்சாரத் துறை மந்திரியாக இருந்த மகேஷ் சர்மா-வுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஓய்வுக்காலத்தில் வசிப்பதற்காக அப்துல் கலாம் வசித்த 10-ம் எண் வீட்டை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த வீட்டில் வசித்து வரும் மந்திரி மகேஷ் சர்மா, அக்பர் சாலையில் உள்ள வேறு இல்லத்திற்கு மாற இருப்பதாகவும். ஓய்வு பெற்ற பின்னர் வசிக்க இருக்கும் பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கு ஏற்றது போல 10-ம் எண் வீட்டில் தேவையான மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவர் இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்க முடியும். அவர்கள் தங்கும் இல்லத்திற்கான வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.