வடகொரியாவின் செயற்பாடுகள் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தையொன்றை நடத்தும் வகையில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியுள்ளனர்.
வடகொரியா இன்று தனது ஆறாவது அணு குண்டு சோதனையை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
வடகொரிய கொள்கைகள் குறித்த அமெரிக்க விசேட பிரதிநிதி ஜோசப் யூன், ஆசிய மற்றும் ஓசியானிய விவகாரங்களுக்கான ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கென்ஜி கனசூகி, கொரிய தீபகற்ப சமாதான மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கொரிய குடியரசின் விசேட பிரதிநிதி கிம் ஹாங்-க்யூன் ஆகியோர் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச சட்டங்களை மீறி வடகொரியா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை புதிய தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.