ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் வெனிசுவேலாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மெரிடா மற்றும் பரிணச் ஆகிய நகரங்களில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரச சார்பு போராட்டத்தின்போது குறித்த இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்துவரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறான கொலைச் சம்பவங்களுக்கு, துணை இராணுவக் குழுக்களே பொறுப்புக் கூற வேண்டும் என மெரிடா மாநில ஆளுநர் ஹென்றிக் கேப்ரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடி வருவதாக வெனிசுவேலாவின் மக்கள் பாதுகாப்பு அதிகாரி தரேக் சாப் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்திவந்த தேசிய சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மீளப்பெறப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக சமீபத்திய எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.