கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததால் ஏற்பட்ட அனர்த்திற்கான முழுப் பொறுப்பையும், அரசாங்கமே ஏற்கவேண்டுமென யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டபோதே மாணவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, உயிரிழந்த உறவுகளுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர்.
அத்தோடு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதோடு, இதுபோன்ற அனர்த்தங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருப்பதற்கு ஆவன செய்யவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
இவ் அஞ்சலி நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி எஸ்.சிவநாதன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.