“எமது விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துப் போராடிய எமது பிள்ளைகளை தொலைத்து விட்டு இன்று அவர்களை தேடி வீதியில் இறங்கி போராடுகின்றோம். அவர்கள் எங்கே?” என இறுதி யுத்தத்தில் தனது மகனை தொலைத்த தந்தை ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) 65ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தந்தை ஒருவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது போராட்டம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்ற போதும், சில ஊடகங்கள் பாராமுகமாக செயற்படுகின்றன எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தோடு, தமது போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் ஆதரவளித்து, தமது போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.