அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்று எந்த புண்ணியவான் எப்போது கூறினாரோ தெரியாது.. ஆனால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நகைக்கடைக்காரர்கள் செய்யும் விளம்பரங்கள் மற்றும் கொடுக்கும் சலுகைகள் எத்தனை எத்தனை? அவ்விளம்பரங்களில் நன்றாக ஏமாந்து மக்கள் அத்தினத்தில் வாங்கிக் குவிக்கும் நகைகள் தான் எத்தனை?
முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம். தங்க வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் மக்கள் அன்று இத்தனை தங்கம் வாங்கியுள்ளார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது? வளம் கொழிக்க வேண்டிய வாழ்வு போய் அன்று தங்கம் வாங்க இவர்கள் படும்பாடு வாழ்வை நரகமாக்குகிறது
புராணக் காலங்களில் சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாள் புனிதமானது. அன்று செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். வேத காலங்களில் எல்லாம் சான்றோர்கள் அட்சயத் திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், முடிந்தால் அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை.
அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக் கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல அவர்களது நோக்கம்..
அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி?
வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பங்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்
அழியும் பொருளை வாங்க தம்மிடம் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடுகளிலும் மனதை செலுத்த முன்வர வேண்டும்.
வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்க வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள்.. பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள்.. பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும். அதை விடுத்து விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து எப்பாடு பட்டாவது அட்சயத்திருதியை அன்று நாம் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பில் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வது நல்லதல்ல.
கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகிவிடக் கூடாது நம் வாழ்க்கை.