.இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது.
இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது:–
26 ஆண்டுகள் கழித்து…
ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரை சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக நான் கேட்டு வருகிறேன். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. ‘‘அவருக்கு தேசிய விருது வழங்க கூடாது, மற்றவருக்கு வழங்கி இருக்க வேண்டும்’’ என்று கூறி சிலர் எப்போதும் சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
நான் 26 ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்றிருக்கிறேன். இந்த விருது பெற நான் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதினால், அதனை திருப்பி வாங்கி விடுங்கள்.
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.
பத்ம பூஷண் விருது
மேலும், உங்களின் சமூக தொண்டு காரணமாக வரும்காலத்தில் ‘பத்ம பூஷண்’ விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இதுபோன்ற உயரிய விருதை பெற நாம் உன்னத சேவை செய்ய வேண்டும். அப்போது தான் அதுபோன்ற விருதுகளுக்கு நாம் தகுதிபடைத்தவர்கள் என்று பொதுமக்கள் கருதுவார்கள்’’ என்று அக்ஷய் குமார் பதில் அளித்தார்.
49 வயதான நடிகர் அக்ஷய் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.