வவுனியா மாவட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது உறவினர்கள் தொடர்பான விபரங்களை பதிவுசெய்யுமாறு வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட 115 பேரின் விபரங்களை அரசுக்கு கையளிப்பதற்காக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைத்ததாக சங்கத்தின் தலைவியான காசிப்பிள்ளை ஜெயவதனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை விரைந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது.
கடந்த 2ஆம் திகதி வவுனியா சென்றிருந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஊடாக தம்மிடம் சமர்ப்பிக்குமாறும், தான் ஒரு மாத காலத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.