தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் இன்று பூரண கதவடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக கதவடைப்பை நடத்துவதற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்கள் பேரவை இந்த கதவடைப்புக்கான அழைப்பை விடுத்திருந்தாலும், நல்லாட்சியிலும் தமிழ் மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பதன் எதிரொலியாகவே, இந்த கதவடைப்பை நடத்தும் அவசியம் உணரப்பட்டுள்ளது.
கதவடைப்புக்;கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட சிவில் அமைப்புக்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளன. தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது இந்த கதவடைப்பு போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரானதாகவே நடைபெறுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்கள் ஓரணி திரண்டு போராடுகின்ற முக்கியத்துவமான போராட்டமாக இன்றைய கதவடைப்பு கருதப்படுமாக இருந்தால், அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம். அவ்வாறெனின் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயத்தையும், தீர்வையும் வழங்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உரத்துச் சொல்வதை அடுத்தகட்ட வேலைத் திட்டமாக முன்னெடுக்கவும் தமிழ் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.
கதவடைப்பு நடத்தவும், ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கவும் முன்னிற்கும் தமிழ் அரசியல் தலைமைகள், இந்த போராட்டத்தின் நோக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பின் நிற்பார்களானால் அது தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் விளையாட்டாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பரிகாரங்களைக் காண்பதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழ்க் கட்சிகள் அதற்காக அரசாங்கத்தை நோக்கி அழுத்தத்தைப் பிரயோகிக்க ஏன் முன்வரவில்லை.
தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஊரோடு ஒத்து ஓடும் ஒரு தந்திரோபாயமாகவே கதவடைப்பு தாமும் ஆதரவு என்று ஊடகங்களுக்கு செய்தியை வழங்கிவிட்டு தமது அலுவலகங்களுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கதவடைப்பை உண்மையாக நடத்துவதற்கு இவர்கள் முன்வருவார்களானால், கதவடைப்பின்; நோக்கத்தை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தும் மகஜரையோ, கோரிக்கையையோ கதவடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்துத் தரப்பினரும் கையொப்பமிட்டு வெளியிட வேண்டும்.
கூட்டமைப்பு, முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்பன ஒரே மேடையில் அல்லது ஒரு பொதுவான இடத்தில் ஒன்று திரண்டு கதவடைப்பின்; நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய ஒருமித்த கருத்தை ஒரே தளத்திலிருந்து வெளிப்படுத்துவதற்கு தமிழ்க் கட்சிகளிடமும், தமிழ் சிவில் அமைப்புக்களிடமும் உள்ளார்ந்த இணக்கம் இல்லை.
கதவடைப்பு அனுஷ்டிக்கப்படுவதால் சாதாரண மக்களுக்கே பாதிப்புக்கள் ஏற்படும். கடைகள் மூடி இருக்கும், போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும், வீதியில் நடமாடுவது தமிழ் இனத் துரோகமாக கருதப்படும் என்ற அச்சம் ஏற்படும். இவை எதுவும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப்போவதில்லை. பெரும்பாலும் தமிழ் அரசியல் தலைமைகள் நாளாந்தம் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்து உணவு தயாரிக்கும் அவசியம் இல்லாதவர்கள். தவிர்க்க முடியாத போக்குவரத்துத் தேவைகள் இருப்போரில்லை.
வடக்கு கிழக்கில் கதவடைப்பு அனுஷ்டிப்பானது ஒரு செய்தியும், தமிழ் மக்களின் உணர்வுமே தவிர எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் நேரடியாக தலைமை தாங்கி நடத்தும் போராட்டமல்ல.
அப்படி மக்களை மாகாண ரீதியாக ஒன்று திரட்டி வெகுஜனப் போராட்டங்களை நடத்தும் தலைமைகள் எவரும் தற்போதைய சூழலில் தமிழ்மக்களிடையே இல்லை. எல்லோருமே மக்களின் போராட்ட கூடாரங்களுக்குள் பகுதி நேரமாக அமர்ந்து ஊடகங்களுக்குத் தலைகாட்டுவதற்கும், அலுவலகங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு அறிக்கை விடுவதற்குமே இன்றுள்ள தலைமைகளால் முடியும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் நீதிக்கான போராட்டத்திற்கும், தமது சொந்த நிலத்துக்காக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும், வேலையற்ற பட்டதாரிகள் நடத்தும் போராட்டத்திற்கும் தமிழ்த் தலைமைகள் உளப்பூர்வமாக தமது ஆதரவை வழங்குவதாக இருந்தால் அவர்கள் பொதுத் தளத்தில் ஏனைய கட்சிகளுடனான கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று திரண்டு தமது பங்களிப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ்க் கட்சிகளை யார் ஓரணி திரட்டுவது என்பது ‘பூனைக்கு யார் மணியைக் கட்டுவது’ என்ற கதையாகவே பல வருடங்களாக இருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழ் அரசியல் தலைமைகளையும் தனித்தனியாக சந்தித்துக் கேட்டால், அவர்கள் தமது ஆற்றலுக்கு அமைவாகவும், தனிப்பட்ட குணாதிசயங்களுக்கு அமைவாகவும் பல வியாக்கியானங்களைக் கூறினாலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு, தற்போது தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டங்களுக்கு நியாயமான தீர்வு என்பவற்றுக்காகவே தாம் போராடுவதாகவே கூறுவார்கள்.
இவர்களின் குறிக்கோள் ஒன்றாகவே இருக்கின்றபோதும் அவர்களால் ஒற்றுமைப்பட முடியாது. அவர்களால் தமது அரசியல் காழ்ப்புனர்ச்சியையும், பழிவாங்கும் உணர்வுகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.
ஒவ்வொரு தமிழ் அரசியல் தலைமைக்கும் அரசியல் எதிராளி எனப்படுபவர்கள் சிங்கள அரசியல்வாதிகளோ, முஸ்லிம் அரசியல்வாதிகளோ இல்லை. சக தமிழ் அரசியல் தலைமைகளே இவர்களின் எதிராளிகள். தாம் நடத்தும் அரசியல் போட்டியானது சக தமிழ் அரசியல் தலைமைக்கு எதிரானதாகும்.
இதுவே உண்மையாக இருக்கையில், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்தும், ஒன்று திரண்டும் ஹர்த்தால் நடத்துவதாகவும்,குரல் கொடுப்பதாகவும் கூறுவது உண்மையாக இருக்க முடியாது.
ஓற்றுமைப்படுவது என்ற ஒரு நிகழ்வு தமிழ்மக்களிடையே சாத்தியமே இல்லை என்பதால், தமிழ்மக்களை பிரித்து எவ்வாறு கையாள வேண்டும் என்ற தந்திரோபாயத்தை இலங்கை அரசும், சர்வதேசமும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
எனவே தமிழரின் தாயகப் பிரதேசத்தில் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக கதவடைப்பு நடத்துகின்றார்கள் என்றால், அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், அதற்கு நாங்களும் ஆதரவுதான் அதுகூட ஒரு அரசியலுக்காகத்தான் என்று அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் கூறி தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் தமிழ்மக்களிடையே இருப்பதுதான் துரதிஷ்டவசமாகும்.
தமிழ் மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டமும், அகிம்சைவழிப் போராட்டமும் தோற்றுப்போனதற்குக் காரணம் இதே காழ்ப்புனர்ச்சி அரசியலும், காட்டிக்கொடுப்பும்தான் என்பதே வரலாறாகும்.
நோக்கம் ஒன்றாக இருக்கும்போதும், அந்த இலக்கை வென்றெடுப்பதற்கு ஒற்றுமையாக போராட முடியாமல் தோற்றுப்போன இனம் தமிழ் இனமாகத்தான் இருக்க முடியும். தமிழ் இனத்தின் உன்னதமான போராட்டங்களை சிங்களத் தரப்போ வேறு யாருமோ தோற்கடிக்கவில்லை.
தமிழ்மக்களிடையே அரசியல் தலைமை கொடுத்தவர்களதும், இயக்கங்கள் நடத்தியவர்களதும் ஒற்றுமையீனமும், நீயா நானா என்ற போட்டியும் தமிழ் இனத்தை முதலில் தோற்கடித்தது.
எனவே தமிழ் மக்களை தோற்கடித்துவிட்டதாக யாரும் மார் தட்டிக்கொள்ளக் கூடாது. தமிழரின் வரலாற்றை நிதானமாக ஆராயும் எவருக்கும் தெளிவாகத் தெரியும். தமிழர்களின் பின்னடைவுக்கு யார் காரணம் என்பது?
இதுதான் தலைவிதி என்றாகிவிட்ட தமிழ்மக்களின் வாழ்வில், புதுமைகளும், மாயா ஜாலங்களும் நடந்தாலே தவிர மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் ஹர்த்தாலும் உணர்வுகளின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமாக இருக்கப்போவதில்லை.