வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுவந்த வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், வீதிமறியல் போராட்டத்தை கைவிட்ட உறவுகள், தொடர்ந்து 63 நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு- கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு- கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்ற நிலையில், அங்கு போக்குவரத்துக்கள் இடம்பெற்றதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இம்மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனைத்து போக்குவரத்துக்ளும் முடக்கப்பட்டிருந்தது.
அதன்போது, அங்குவந்த பொலிஸார் போராட்டக்காரர்களுடன் கலந்துதரையாடிய போதிலும், போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்து போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவா் போரட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதற்கு அமைய மக்கள், வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு, தமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.