ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளில் ஒருவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறுவதற்காக ரூ.50 கோடி வரை டி.டி.வி.தினகரன் பேரம் பேசியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் சுகேஷ் செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மூலம் எங்களுக்கு தெரியவந்தது.
அந்த தொலைபேசி உரையாடலை நாங்கள் போட்டு காட்டியதும் அதில் இருக்கும் குரல் தன்னுடைய குரல்தான் என்று தினகரன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினகரனின் தொலைபேசியிலும் நாங்கள் ஆய்வு செய்தோம்.
அந்த போனில் டி.டி.வி. தினகரனுடன் 3 தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் பேசி இருப்பது தெரியவந்தது. சுகேஷ் வாக்கு மூலம் கொடுத்ததும் நாங்கள் தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தோம்.
இதனை அறிந்த அந்த 3 போலீஸ் அதிகாரிகளும் தினகரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். டெல்லி போலீசாரின் வழக்கு விவகாரங்களில் இருந்து தப்புவதற்கு உதவி செய்வதாக அவர்கள் கூறினார்கள்.
அதற்கு பிரதிபலனாக அந்த போலீஸ் அதிகாரிகள் மாநில உளவுத்துறையில் தங்களை உயர்பதவியில் அமர்த்த கோரிக்கை விடுத்தனர். டெல்லியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அந்த 3 போலீஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி போலீசாரின் வழக்கை தாமதப்படுத்த என்னென்ன செய்யலாம் என்றும் அந்த போலீஸ் அதிகாரிகள் பேசியுள்ளனர். இவை அனைத்தையும் தினகரன் எங்களிடம் வாக்கு மூலமாக கொடுத்துள்ளார்.
தற்போது நாங்கள் அந்த 3 போலீஸ் அதிகாரிகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்கள் தினகரனை காப்பாற்ற எந்தெந்த வழிகளில் முயன்றனர் என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.
தேவைப்பட்டால் அந்த 3 போலீஸ் அதிகாரிகளையும் எங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவோம்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.