கட்சியில் பலமிக்கவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கும் வேலைத்திட்டம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரே ஏற்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்துதல் என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
பிளவுப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய தலைவரிடம் கையளித்தேன். கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற தேவைக்காக கட்சியின் தலைமையை என்னிடம் வைத்துக் கொள்ளவில்லை.
சுதந்திரக் கட்சியில் உள்ள பிரபலமானவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கி வருகின்றனர். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க எதிரணிக்கு தான் தலைமை வழங்குவதாகவும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் காலி முகத்திடலுக்கு வந்து முக்கிய செய்தியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் கூறியுள்ளார்.