யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம்!! குழப்பத்தில் பல்கலைகழகம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் யாழ் பல்கலைக்கழக சமூகத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக செய்திகள் விரைவில்.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதியுடன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும் புதிய துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நேற்று வரை நியமனம் தாமதித்திருந்தது.
கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நடாத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவில் முன்னிலை வகித்த மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நடைமுறைகளின் படி துணைவேந்தர் தெரிவில் முதலிடம் பெற்றிருந்த பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு செய்தி கசிந்திருந்தது. எனினும் துணைவேந்தர் நியமனம் இற்றைப்படுத்தப்படாத காரணத்தினால், தற்போதைய துணைவேந்தரை மறு அறிவித்தல் வரை கடமைகளைத் தொடருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த 24 ஆம் திகதி மாலை பணித்திருந்தது.
இந்நிஸையில், கடந்த 24 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தங்கள் மற்றும் வெளித் தலையீடுகளை ஏற்றுக் கொள்ளாததன் பின்னணியிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை,
அதீத அரசியல் செல்வாக்கும், மூன்றாவது சக்தி ஒன்றின் தலையீடுமே துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி நிலைக்குக் காரணமென அவதானிகள் கருத்து.