சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் கடந்த திங்கள் கிழமை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் உள்பட 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை நாங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறோம். துணிச்சலுடன் போராடிய படை வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
பழங்குடியினர், ஏழை மக்களின் வளர்ச்சிக்கு நக்சலைட்டுகள் மிகப்பெரிய எதிரிகளாக திகழ்கின்றனர். அவர்களின் தீயநோக்கம் ஒரு போதும் வெற்றி பெறாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பல்வேறு சம்பவங்களில் தன்னுடைய தீவிர நாட்டுப்பற்றை காட்டிவரும் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 25 சிஆர்பிஎப் வீரர்களில் குழந்தைகளுக்கு ஆகும் கல்வி செலவை தனது அறக்கட்டளை ஏற்கும் என அறிவித்து உள்ளார். கவுதம் காம்பீர் அறக்கட்டளையில் வழியாக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும், இவ்விவகாரம் தொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது எனவும் தெரிவித்து உள்ளார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனம் உடைந்த கவுதம் காம்பீர், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எழுதிஉள்ள கட்டுரையில், “புதன்கிழமை காலையில் நான் செய்தித்தாள்களை எடுத்தேன், சமீபத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த இரு சிஆர்பிஎப் வீரர்களின் பெண் குழந்தைகள் கதறி அழும் மிகவும் துயரமான புகைப்படங்களை பார்த்தேன். ஒரு புகைப்படத்தில் தன்னுடைய தந்தையின் உடலுக்கு மகள் மரியாதை செலுத்தும் காட்சி, பிற புகைப்படத்தில் கதறி அழும் பெண்ணுக்கு அவருடைய உறவினர்கள் ஆறுதல் கூறுகிறார்கள்,” என குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த புதன்கிழமை நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர், உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பு கை பட்டைகளை அணிந்து இருந்தார்.
கட்டுரையில் மேலும் குறிப்பிட்டு உள்ள கவுதம் காம்பீர், “மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் கல்விக்கு ஆகும் முழு செலவையும் கவுதம் காம்பீர் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். இதற்கான பணிகளை என்னுடைய குழுவானது தொடங்கிவிட்டது, இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பகிர்ந்துக் கொள்வேன்,” என கூறிஉள்ளார்.