மரணம் அடைந்த நடிகர் வினோத் கன்னாவின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
உடல் தகனம்
பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான வினோத் கன்னா, புற்றுநோயால் மும்பையில் நேற்று காலை மரணம் அடைந்தார். மாலையில் மும்பை ஒர்லியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் நடந்தது. இதற்காக அவரது உடல் மலபார் ஹில்லில் உள்ள வீட்டில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இறுதிச்சடங்கில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், ரிஷி கபூர், ரன்தீப் கபூர், குல்சார், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, மறைந்த வினோத் கன்னாவுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
ரஜினி இரங்கல்
வினோத் கன்னா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் “என் இனிய நண்பரே, உங்களை இழந்து தவிக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல இந்தி திரைப்பட நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.