2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை முழுமையாக கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழக மக்கள் தற்போது குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் அதற்கான தீர்வினை தமிழக அரசு வழங்காமல் அ.தி.மு.க. கட்சி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்றை மத்திய அரசு முழுமையாக கண்டு பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜான்சி ராணிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எமது வேலுநாச்சியார் மற்றும் தேசிங்குராஜா ஆகியோருக்கு கொடுக்கப்படுவதில்லை ஏன் இவ்வாறு நடத்தப்படுகின்றது என்று கேள்வி எழுப்பினார்.
அத்தோடு, கேரள அமைச்சர் ஒருவர் தமிழ் பெண்ணை கேவலமாக பேசியதாகவும் அதற்கு கண்டனம் வெளியிட்டு நடத்தப்படும் போராட்டத்தில் தமிழர் கட்சி கலந்து கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.